Sunday, July 18, 2010

‘மானாட மயிலாட’

தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ ஆட்டம் பார்க்கும் ரசிக மகா ஜனங்களே! இதைப் படியுங்கள்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் கடந்த வாரம் மான்களை சுட்டுக் கொன்று மாமிசத்தை பார்சல் செய்துகொண்டிருந்தது ஒரு கும்பல். தகவல் கிடைத்து விரைந்து சென்ற சங்ககிரி டி.எஸ்.பி சுப்பிரமணியம் டீம் ரமேஷ், சந்திரப்பன், பாபு(எ) இஸ்மாயில் ஆகிய மூன்று பேரை அமுக்கிப் பிடித்தது. பக்கத்து மலைகளில் உடும்பு, முயல் போன்ற விலங்கினங்களை அடிக்கடி வேட்டையாடி ருசிக்கும் இந்தக் கும்பலுக்குக் கடைசியில் மான் ஆசை வந்து மான் வேட்டையாடிவிட்டது.
அதனாலென்ன? 2 லட்ச ரூபாய் அபராதம் உடனே கட்டிவிட்டு வெளியே வந்துவிட்டனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய மனசாட்சி உள்ள சில வனக்காவலர்கள்,
“எங்கெங்க மான் மேயும்னு இவங்களுக்குத் தகவல் சொல்றதே வனத்துறை ஊழியர்கள்தான். அந்த லிஸ்ட்டில் வந்த மொரப்பூர் வன ஊழியர் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சில ஃபாரஸ்டர்களுக்கும் மெமோ கொடுக்கப்-பட்டுள்ளது. மான் கறியை ரெகுலராக வாங்குவதற்கு சில போலீஸாரும் ரமேஷுடன் தொடர்பு வைத்திருந்தது பற்றியும் விசாரணை நடக்கிறது” என பகீர்த் தகவல்கள் சொன்னார்கள்.
மான்களின் நிலைமை இப்படி-யென்றால்... நம் தேசியப் பறவைகளான மயில்கள்?
புதுக்கோட்டை அருகே உள்ள விராலிமலையில் ஒரு காலத்தில் சுமார் பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த மயில்களின் எண்ணிக்கை இப்போது வெறும் ஆயிரம் கூட இல்லை. மிச்சப்பட்ட மயில்களும் கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள வயல்-வெளிகளுக்கு இரை தேடி கும்பல் கும்பலாகப் படையெடுக்கின்றன.
கரூர் மாவட்டத்தில் அமராவதி கரையோரத்தில் பரமத்தி அருகே காளியப்பனூர் பகுதியிலும், குளித்தலை அருகே நச்சலூர், இனுங்கூர், தோகமலை, பில்லூர் பகுதிகளிலும், திருச்சி மாவட்டத்தில் காவிரிப் படுகையிலும், பெட்டவாய்த்தலை, பெருமணி, வயலூர் போன்ற பகுதிகளிலும் அதிக அளவில் மயில்கள் உள்ளன. ஆனால், இவை இப்போது தினம் தினம் உணவுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் ராஜேஷ் கூறும்போது,
“மயிலை வேட்டையாடும் கும்பல், அது மருந்து எனச் சொல்லி அதனை எரித்தும், வாட்டியும் ஆயில் எடுத்து எக்கச்சக்க விலைக்கு பணக்காரர்களுக்கு விற்கிறார்கள். கிராமங்களில் சிலர் இரவு நேரங்களில் பாஸ்பரஸ் வைத்து மயில் வேட்டை நடத்தி வருகின்றனர். மயில், முருகக் கடவுளின் வாகனம் என்பதால் அதை வீட்டில் சமைக்க எதிர்ப்பு வரும். எனவே, காட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு விடுகின்றனர். மயில் இறகுகளை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்கின்றனர். இதுகுறித்து போலீஸார் முறையான விசாரணை நடத்தினால் உண்மை தெரிய வரும். இதுபற்றி கரூர் எஸ்.பி.யிடம் புகார் கூற இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து டாக்டர்களிடம் பேசினால், “மயில் இறகை எரித்து கருகியதும் தேனில் குழைத்து அளித்தால் குழந்தைகளுக்குச் சளித்தொல்லை தீரும் என்றும், மயிலை முழுமையாகத் தீயில் வாட்டி எடுத்தால் கிடைக்கும் எண்ணெய் மூட்டு வலிக்கு அருமருந்து என்றும் சிலர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். அவை உண்மையில்லை” என்கிறார்கள்.
இதுவிஷயமாக வனத்துறை அலுவலர்கள் தரப்பில் விசாரிக்கப் போனால் “மீட்டிங், காட்டுக்குப் போயிருக்கிறார்கள்” என்று சொல்லியே தட்டிக் கழித்துவிட்டனர்
டி.வி.யில் மட்டுமல்ல காடுகளிலும் மானாட மயிலாடலாம். மானும் வாடி, மயிலும் வாடலாமா?

புகைப்பட பயணம்...