அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்).
இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!


No comments:
Post a Comment